89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு

89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு

தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் வசிக்கும் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து, கௌரவம் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சியை வரவேற்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு இது ஒரு நம்பிக்கையை அளிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட அரசியல் நகர்வாகவோ அல்லது தேர்தல் கால அரசியலாக்கப்படும் ஒரு முயற்சியாகவோ இருக்கக்கூடாது என அவர் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் தேர்தல் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதிகளில் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் சுயமாகத் தமது தாயகத்திற்குத் திரும்புவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது தாயகம் திரும்ப விரும்புவோருக்குச் சில தடைகள் ஏற்படுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களை மீண்டும் உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவத்திற்கு நாமே பொறுப்பு” எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இவர்கள் இந்திய முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்படத் தேவையில்லை என்றும், உரிமையுள்ள பிரஜைகளாக இலங்கையில் வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை இலங்கை, இந்தியா மற்றும் தமிழக அரசாங்கங்கள் அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )