பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி

பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி

பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம் என முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட முகாமையாளரும் முன்னாள் சிறுவர்கள் பாதுகாப்பு நிதியம் ஐக்கிய இராச்சியம் (இலங்கை) உதவி மாவட்ட இணைப்பாளருமான இரவி ஆனந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“அரசாங்கம் “பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவது இலக்கு” என்று அறிவித்திருப்பதை வரவேற்கின்றோம். கல்வி ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், ஒரு முக்கியமான அடிப்படை கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது.

பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல்
இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம்?

கடந்த ஆண்டு நான் அதிஉயர் சனாதிபதிக்கும், கௌரவ பிரதமருக்கும்,கல்வி அமைச்சருக்கும் திறந்த மனுவின் மூலம், பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.

குறிப்பாக தற்போதைய பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட நிதி ஒதுக்கீடு அனைத்து பாடசாலைகளிலும் தரத்துடனும் முழுமையாகவும் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பினேன்.

தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது,
• அனைத்து பாடசாலைகளிலும் திட்டம் ஒரே தரத்தில் செயல்படவில்லை.
• உணவின் அளவு மற்றும் ஊட்டச்சத்து தரத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
• on-site-திடீர் கண்காணிப்பு மற்றும் தர மதிப்பீட்டு முறைமைகள் இல்லை அல்லது பலவீனமாக உள்ளன.

நான் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டம் (UN World Food Programme) இல் பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட முகாமையாளராக பணியாற்றியபோது, 15 மாவட்டங்களில் 1,602 பாடசாலைகள் மற்றும் 450,000 ஆரம்பப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய திட்டத்தை வழிநடத்தினேன். அப்போது செயல்படுத்திய முக்கியக் கோட்பாடுகள்,

1. திடீர் தள கண்காணிப்பு (Random Surprise Monitoring)
2. சமூக அடிப்படையிலான கண்காணிப்பு குழுக்கள்
3. உணவு தர மற்றும் அளவு தரநிலைகள்
4. வெளிப்படையான கணக்கியல் மற்றும் அறிக்கை முறை

இந்த நான்கு அம்சங்களும் இருந்தால்தான் திட்டம் தரமாகவும் நியாயமாகவும் செயல்படும்.

ஒரு பிள்ளையின் அடிப்படை மூன்று தேவைகள், உணவு – உடை – இருப்பிடம். இவை உறுதி செய்யப்பட்ட பின்னரே
கல்வி உண்மையில் மலரும்.

எனவே அரசாங்கம்,
• தேசிய அளவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.
• மாவட்ட மட்டத்தில் சுயாதீன தர ஆய்வு குழுக்களை அமைக்க வேண்டும்.
• பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட நிதி பயன்பாட்டை வெளிப்படையாக்க வேண்டும்.
• ஆசிரியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் ஏனைய நலன்விரும்பிகளையும் உள்ளடக்கிய நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும்.

இது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக அல்ல,பிள்ளைகளின் நலன்களையும் அவர்களது உரிமையை உறுதி செய்வதற்காகவே. ஆகக்கூடியதாக பாடசாலை நாட்களிலாவது பசியை குறைப்பதற்காக உணவு வழங்கப்பட்டால், பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு வருவார்கள். அவர்களுடைய சிந்தனைத்திறனும் சிறப்பாக வளரும்.

“பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்டத்தினூடான கல்வி — பசியை போக்கினால் தான் கல்வி மலரும். “

“இதுவே உண்மையான தரமான கல்வியின் அடித்தளம்” என குறிப்பிட்டுள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )