
யாழ். இந்துக்கல்லூரி ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நேற்று பிற்பகல் 2 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை 7.30 க்கு கணபதி வழிபாடும் புண்ணியாகசளமும் இடம்பெற்றது.
பின்னர் இன்று காலை 11 மணிக்கு மகாகும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளுடன் குடமுழுக்கு நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதிஷ்டா பிரதமதகுருவாக சிவாஸ்ரீ தியாக மயூரகிரிக்குருக்களுடன் இணைந்து ஆலயகுருவான சிவஸ்ரீ க.நிரஞ்சனசர்மா இன்றைய மகானும்பாபிசேகத்தினை சிறப்பாக நடத்தியிருந்தனர்.
அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில், கல்லூரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாககும்.
பல ஆண்டுகளாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள்பாலித்து வரும் வைரவமூர்த்தி கோயில், நல்லை ஆதீனத்தின் ஆசியுடன் நிர்வகிக்கப்பட்டு, பல கும்பாபிஷேகப் பெருவிழாக்களையும் கண்டுள்ளது.
சிவஞான வைரவருடன், வித்யா கணபதி மற்றும் தண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளனர்.
மாணவர்களின் கல்வி விருத்தி மற்றும் பாதுகாப்பிற்காகப் பிரத்தியேக வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் பாடசாலை நாட்களில் நடத்தப்படுகின்றன.
யாழ். இந்துக்கல்லூரியின் நீண்ட வரலாற்றோடு இணைந்த, கல்வியையும் பண்பாட்டையும் காக்கும் ஆலயமாக ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலில் விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
