
கனடா பாடசாலையில் கோர துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி – தாக்குதல்தாரியும் உயிர்மாய்ப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல்தாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) மேல்நிலைப் பாடசாலைக்குள் (High School) ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு வீட்டின் உள்ளே பொலிஸாரால் மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கருதப்படும் நபர், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், சுமார் 25 பேர் உயிருக்கு ஆபத்தில்லாத சிறு காயங்களுடன் உள்ளூர் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடசாலையிலிருந்த ஏனைய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பத்திற்கு முகம்கொடுத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஒன்று சேர்ப்பதற்கான பணிகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
