
அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா
ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்தும் நோக்கில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.
அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஆகியோர் இந்த ‘123 ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டனர். இதன் மூலம் அமெரிக்கா தனது அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் சிறிய ரக அணு உலைகளை அர்மேனியாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஆரம்பகட்டமாக 5 பில்லியன் டொலர் ஏற்றுமதியும், நீண்டகால பராமரிப்பிற்காக 4 பில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்படவுள்ளதாக Vance தெரிவித்தார்.
தற்போது ரஷ்யாவால் கட்டப்பட்ட மெட்சமோர் (Metsamor) அணுமின் நிலையத்தைப் பயன்படுத்தி வரும் அர்மேனியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது எரிசக்தி தேவையில் ரஷ்யா மற்றும் ஈரானில் தங்கியிருக்கும் நிலையை மாற்றிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
