
உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இந்நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேல்நீதிமன்றத்தின் மூலத் தோற்றம் மற்றும் கட்டமைப்பை மாற்றாது, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற நீதியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நீதியரசர்களுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவண அறை மற்றும் கேட்போர் கூடம் என்பனவும், அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா கட்டமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இக்கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
”1988ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத் தொகுதி, மூன்று தசாப்தங்களின் பின்னர் காலத்தின் தேவைக்கேற்ப இவ்வாறு நவீனமயமாக்கப்படுவது மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும்.
நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உண்மையில் பொதுமக்களின் நம்பிக்கையிற்காகச் செய்யப்படும் முதலீடாகும். பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சூழல் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவம் மேலும் வலுவடையும். எனக் கூறினார்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், நீதி அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்படும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த நவீன வசதிகள் உறுதுணையாக அமையும்” என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, சட்டமா அதிபர் பாரீந்த ரணசிங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
