
ஈரானிலுள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு வெள்ளை மாளிகை உத்தரவு
ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு, வீதிகள் மூடல்கள், பொதுப் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் ஆகியவை தொடர்ந்து நீடிக்கின்றன. ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கர்கள் இப்பொழுதே ஈரானை விட்டு வெளியேறுங்கள். உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு பாதுகாப்பான கட்டடத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக தங்கி இருங்கள். உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருங்கள்.
ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
