
தமிழர்களின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
இலங்கையின் 78 ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
இந்த பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியறாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
