
போலி தகவல்களை பரப்ப வேண்டாம் – அமைச்சர் ஜயக்கொடி
உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயற்பாடுகள் 2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் டெண்டர் முறைமைக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியின் போது டெண்டர் முறைமையையோ அல்லது விவரக்குறிப்பு முறைமைகளையோ மாற்றவில்லை என்றும், நிலக்கரியின் தரம் குறித்து விசேட நிலைமை ஏதேனும் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் டெண்டர் மற்றும் கொள்முதல் செயன்முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிலக்கரி விநியோகம் அல்லது அதன் தரம் தொடர்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து காணப்படும் சர்வதேச முறைமைகளுக்கமைய டென்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமையவே செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் போலி தகவல்களை வெளியிடுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டுமென வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மேலும் தெரிவித்தார்.
