
எப்ஸ்டீன் விவகாரம் – பீட்டர் மண்டேல்சனின் நியமனம் குறித்து ஸ்டார்மருக்கு பெரும் அழுத்தம்
2024 ஆம் ஆண்டு முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் அமெரிக்க தூதராக நியமித்தமை குறித்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் பல கேள்விகளை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு வணிகச் செயலாளராக இருந்தபோது, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சந்தை உணர்திறன் கொண்ட அரசாங்கத் தகவல்களை வழங்கியதாக பீட்டர் மண்டேல்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொலிஸார் குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மண்டேல்சன் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாவும் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் காரணமாக செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மண்டேல்சனை தூதராக நியமிப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடைமுறைகள் குறித்து தகவல்களை வெளியிட கன்சர்வேடிவ் கட்சி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தொழிலாளர் கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, பீட்டர் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் அரசு எச்சரிக்கையுடன் தகவல்களை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
