
இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – தோனியின் கவலை
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பனி பொழிவு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டு தொகுப்பாளர் ஜதின் சாம்ப்ரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய தோனி இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்திய அணி மிகவும் ஆபத்தான அணி. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி மிகவும் ஆபத்தானது.
தற்போதைய அணிக்கு அனுபவம் உள்ளது, குறிப்பாக டி20 வடிவத்தில் மிகுந்த அனுபவம் உள்ளது.
வீரர்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், மேலும் அனைவரும் தங்களின் பாத்திரங்களை சிறப்பாக செய்கிறார்கள்.
ஆனாலும் எனக்கு மிகப்பெரிய கவலை பனி பொழிவு தான்.
எனெனில் பனிப் பொழிவு போட்டியின் போக்கை முற்றிலும் மாற்றிவிடும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.
“நான் விளையாடும்போது, பனிப் பொழிவை கண்டு மிகவும் பயந்துள்ளேன். இதுபோன்ற சமயங்களில், நாணய சுழற்சி உங்களுக்கு மிக முக்கியமானதாகிவிடும்.
சிறந்த அணிகளுக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடினால், நாங்கள் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
எனினும், எங்கள் வீரர்கள் மோசமான நாளையும், எதிர் அணி நல்ல நாளையும் அனுபவிக்கும்போது சந்தரப்பம் எழும், இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும்.
இந்த சந்தர்ப்பம் லீக் கட்டத்திலோ அல்லது நாக் அவுட் கட்டத்திலோ எந்த நேரத்திலும் நிகழலாம்” என்று தோனி மேலும் தெரிவித்துள்ளார்.
