
பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகங்களை அடையாளம் காணக்கூடிய புகைப்படங்கள் மற்றும் சில நிர்வாண படங்களும் இடம்பெற்றன. இதனால் உயிர் பிழைத்த சுமார் 100 பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெளியீட்டை “மூர்க்கத்தனமானது” என பாதிக்கப்பட்டவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். தங்களை பெயரிட்டு வெளியிடக்கூடாது என்றும், மீண்டும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மனித அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக ஏற்பட்டதாக அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதியிடம், இந்த ஆவணங்களை வெளியிட்ட இணையதளத்தை முழுமையாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அமெரிக்க வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மிக மோசமாக மீறிய சம்பவம் என அவர்கள் தெரிவித்தனர்.
சில பாதிக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட வங்கி விபரங்கள் வெளியான பிறகு மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவர் இந்த வெளியீட்டை “உயிருக்கு ஆபத்தானது” என விவரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க நீதித்துறை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், வெளியிடப்பட்ட கோப்புகளில் 0.1% மட்டுமே தவறான தகவல்களை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரிசெய்ய துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.
எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை பொதுமக்களுக்கு வெளியிட காங்கிரஸ் சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 30 லட்சம் பக்கங்கள், 1.8 லட்சம் படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
