
‘2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை இன்று (01) தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
2025-26 இல் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1 சதவீதமாக இருந்த உற்பத்தி-கடன் விகிதம், 2026-27 பட்ஜெட் மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55.6 சதவீதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உற்பத்தி-கடன் விகிதம் குறைந்து வருவது, வட்டி செலுத்துதல்களுக்கான செலவைக் குறைக்கும். கடன் அல்லாத வரவுகளின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு, ரூ. 34 லட்சம் கோடி.
இதில் மத்திய அரசின் நிகர வரி வரவுகள் ரூ. 26.7 லட்சம் கோடி. மொத்த செலவினங்களின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு ரூ. 49.6 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு சுமார் ரூ. 11 லட்சம் கோடி
குறையும் நிதிப் பற்றாக்குறை: 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் செய்யப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை 2025-26 ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டுக்கு இணையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-27-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும்” என்றார்.
