
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் ஆர்வம்: நேட்டோ நாடுகள் கடுதம் எதிர்ப்பு
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேவைப்பட்டால் ராணுவ வலிமையைப் பயன்படுத்தியும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற நிர்வாகத்தின் மிரட்டலுக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து வியாழக்கிழமை ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் ரூபன் காலெகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள இந்தத் தீர்மானத்தில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாட்டின் பகுதியை வலுக்கட்டாயமாகப் பறிப்பது என்பது நட்பு நாடுகளிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், ஆர்டிக் பகுதியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களைக் காக்க ஒத்துழைப்பே சிறந்தது, மிரட்டல் அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கிற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் நார்வே உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் தங்களின் சிறிய அளவிலான ராணுவக் குழுக்களை கிரீன்லாந்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.
இது அமெரிக்காவிற்கு எதிரான நேரடிப் போர் அல்ல என்றாலும், டென்மார்க்கின் இறையாண்மையைக் காப்பதற்கான ஒரு குறியீட்டு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் தங்களது வீரர்கள் ஏற்கனவே அங்கு பயிற்சிக்காகச் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவு அமைச்சர்கள், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதையும், அமெரிக்காவுடன் இணைய விரும்பவில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அமெரிக்காவின் பாதுகாப்பு கவலைகளை ஆராய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க டென்மார்க் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த மோதலைக் கூர்ந்து கவனித்து வருவதுடன், மேற்கு நாடுகளின் இந்த ராணுவ நகர்வுகள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாக விமர்சித்துள்ளன
