
டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது
இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மிகவும் அவதானமான இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு சபையின் தகவல்படி, டில்லியின் காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 372 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காற்றின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 18.4 வீதம் பங்களித்துள்ளதாகவும், தொழிற்சாலைகள் 9.2 வீதம் பங்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தென்மேற்கிலிருந்து மெதுவாக வீசும் காற்று மாசுபாட்டின் பரவலைக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சில இடங்களில் காற்றின் தரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காற்றின் தர குறியீட்டின்படி 482க்கும் மேல் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் தொழில்துறை நடவடிக்கைகள், அதிகரித்த மக்கள் தொகை மற்றும் மெதுவாக வீசும் காற்று என்பன காற்று மாசுபாடுகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
