கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது

கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால்,  கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி  மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வீதி தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய  நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது.

தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி மக்கள் தமது பயண வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை, பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில் பாதைகள் சீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலுமாக சேதமடைந்துள்ள முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை இராணுவத்தினர் மீள புணரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளத்தால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (02) தெரிவித்திருந்தது.

பாலம் இடிந்து விழுந்ததால், முல்லைத்தீவிலிருந்து வெலிஓயா, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை மற்றும் முல்லைத்தீவிலிருந்து கொக்கிலாய் வரையிலான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, பிரதான ரயில் பாதையில் அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே ரயில் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்தின் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பேரழிவால் சேதமடைந்த ரயில் பாதைகளை சரிசெய்யும் பணி ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிராதான வீதிகளை சீரமைக்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )