
டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் மினிபேயின் தொலைதூர மலைப்பகுதி கிராமமான நெலும்கம எனும் கிராமத்தில் இருந்து 22 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர அனர்தத்தின் போது, அந்த கிராமத்தில் உள்ள 16 வீடுகளில், 12 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பலர் மண்ணில் புதையுண்டனர்.
மேலும், மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள் இல்லாமையால், குறித்த கிராமம் வெளி இடங்களுடனான உறவும் துண்டிக்கப்பட்டிருந்தது.
திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இராணுவ மீட்புக் குழுக்கள் கூட அந்தப் பகுதியை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இன்று காலை, கடினமான பயணத்திற்குப் பின்னர், மீட்பு குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்றனர். இடிபாடுகளில் இருந்து 22 உடல்களை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்டுள்ளனர்.
பேரழிவு நடந்த நேரத்தில் சுமார் 30 பேர் அந்த கிராமத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
