திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்

திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.
குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.” எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.
பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.
எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
