கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன், தட்டுவன்கொட்டி, பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலை தொடர்வதால் பல கிராமங்களில் மக்கள் குடிபெயரும் நிலையேற்படும் என பல்வேறு பொது அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவது தொடர்பில், தொடர்ச்சியான முறைப்பாடுகள் மாவட்ட உயர்மட்ட அரச அதிகாரிகள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றிற்கு பிரதேச பொது அமைப்புகள் தொடர்சியாக முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் குஞ்சுப்பரந்தன், கல்லாறு ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினுடைய தலைவரும், கடத்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் எந்த விதமான முன்னேற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை என பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போது இரணைமடுக்குளத்தின் கீழான கனகராயன், ஆறு பன்னங்கண்டி மற்றும் செருகன் கல்லாறு தட்டுவன்கொட்டி போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் அரசியல் பின்புலத்தை உடையவர்கள் கிளிநொச்சி – தருமபுரம் கிளிநொச்சி – பூநகரி ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் குறிப்பிட்ட சில பொலிஸ் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றும் குறிப்பிட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் துணையுடனே குறித்த இடங்களில் அகழ்ந்தெடுக்கப்படும் மணல் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கினாலும் உடனடியாக தகவல் வழங்குபவர்களின் விபரத்தை பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கி செல்கின்ற நிலைமையும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே இவ்வாறு தொடரும் இயற்கை வளங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மணல் அகழ்வதற்கான அனுமதிகளோ அல்லது வழித்தட அனுமதிகளோ இல்லாத நிலையில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பலரும் கூறுகின்றனர்.

Share This