இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி  இன்று விஜயம்

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார்.

அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி – மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது.

இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.

இந்த மோதலில் 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின.

தற்போது இயல்புநிலை திரும்பி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இனக் கலவரத்துக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார்.

இதுகுறித்து தலைநகர் இம்பாலில் மாநில தலைமைச் செயலர் புனித்குமார் கோயல் நேற்று கூறியதாவது,

மிசோரம் மாநிலத்தில் பைரபி – சாய்ரங் ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி 13 ஆம் திகதி தொடங்கி வைக்கிறார். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

அங்கு குகி – மைத்தேயி கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களிடம் உரையாடுவார்.

பின்னர், 7,300 கோடி ரூபா பெறுமதியான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைதி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிற்பகல் 2.30 அளவில்1,200 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகை, மணிப்பூரில் முழு அமைதி ஏற்படவும், இயல்புநிலை திரும்பவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்றார்.

இதேவேளை, ‘பிரதமர் மணிப்பூர் செல்வது வரவேற்கத்தக்கது’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This