உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் துருப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா “வான்வழியாக” ஆதரவை வழங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம், குறிப்பாக விமானம் மூலம், ஏனென்றால் எங்களிடம் உள்ளதைப் போன்ற பொருட்களை யாரும் வைத்திருக்க மாட்டார்கள்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ள உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவர் அமெரிக்க ஜனாதிபதி தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி புடினை அலஸ்காவில் சந்தித்துத்துப் பேசிய டிரம்ப், கடந்த திங்கட்கிழமை உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசியிருந்தார்.
திங்கட்கிழமை நடந்த சந்திப்பை நேர்மறையாகவும், பயனுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் ஐரோப்பியத் தலைவர்களும் சித்தரித்தாலும், போருக்குப் பிந்தைய உக்ரைனின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்ற கேள்வி போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது.
உக்ரைனில் சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்த மேற்கத்திய துருப்புக்களை அனுப்புவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடன்படலாம் என்று டிரம்ப் பரிந்துரைத்திருந்தாலும், மொஸ்கோ அந்த யோசனையை பலமுறை நிராகரித்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனும் பிராந்திய சலுகைகள் மற்றும் விரிவான சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னதாக போர்நிறுத்தத்தை செயல்படுத்துவதில் தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்புக்கான தனது திட்டங்களை டிரம்ப் விரிவாக தெரிவித்துள்ளார்.
புடினை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறியிருந்தாலும், ரஷ்ய ஜனாதிபதி இந்த சந்திப்பில் கலந்து கொள்வாரா என்பதை மொஸ்கோ உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், புடின் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பை நடத்த தயாராக இருப்பதாக சுவிட்ஸர்லாந்து நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.