முக்கிய பகுதிகளை கேட்கும் புடின்… தர மறுக்கும் ஜெலன்ஸ்கி!!

முக்கிய பகுதிகளை கேட்கும் புடின்… தர மறுக்கும் ஜெலன்ஸ்கி!!

போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் உக்ரைனின் பங்களிப்பு இருக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனையாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் விடுவிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் கேட்டுக்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மூடிய கதவுகளுக்குள் நடந்த அலாஸ்கா சந்திப்பு குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது முக்கிய கோரிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டவறில் சமரசம் செய்யப் போவதில்லை என்று புடின் விளக்கமளித்துள்ளார்.

அதற்கு ஈடாக, ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளான கெர்சன் மற்றும் சபோரிஜியாவின் தெற்குப் பகுதிகளில் சண்டையை நிறுத்தவும், கூடுதல் பிரதேசங்களைக் கைப்பற்ற மேலும் தாக்குதல்களை நடத்தமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து புடினின் நிலைப்பாடு தொடர்பான தகவலை திங்கட்கிழமை வாஷிங்டனிற்கு வரவுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துரைத்துள்ளார்.

ஆனால், அதற்கு ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு தகவலின்படி, நேடோ அல்லாத ஆர்டிகள் ஐந்து பாதுகாப்பை உக்ரைனுக்கு வழங்கவது குறித்து ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இது நேட்டோவின் முறையான உறுப்பினர் பதவியை வழங்காமல் கூட்டுப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியாகும்.

இதுதொடர்பான ட்ரம்பின் பரிந்துரைக்கு அலாஸ்கா சந்திப்பின்போது புடினும் தற்காலிகமாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பதிலாக அமைதி உடன்படிக்கைக்கு டிரம்ப் அழைப்பு விடுத்து வந்தாலும், முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெறவில்லை என்றால் மொஸ்கோ மீது வலுவான தடைகளை விதிக்கக் கோரி ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.

அதன்படி, “ட்ரம்புடனான எனது உரையாடலில், முத்தரப்பு சந்திப்பு இல்லாவிட்டால் அல்லது ரஷ்யா போருக்கு நேர்மையான முடிவைத் தவிர்க்க முயன்றால் தடைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறினேன்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டின் ஈடுபாட்டுடன், பாதுகாப்பு நம்பகமானதாகவும் நீண்ட கால ரீதியாகவும் உறுதி செய்யப்பட வேண்டும்.
உக்ரைனுக்கு முக்கியமான அனைத்து பிரச்சினைகளும் உக்ரைனின் பங்கேற்புடன் விவாதிக்கப்பட வேண்டும், மேலும் எந்தப் பிரச்சினையும், குறிப்பாக பிராந்திய பிரச்சினைகளை, உக்ரைன் இல்லாமல் முடிவு செய்ய முடியாது” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் நட்பு நாடுகளுடன் ஒரு வீடியோ காலை கூட்டி, ஜெலென்ஸ்கியின் வாஷிங்டன் வருகைக்கு முன்னதாக உத்திகளை வகுக்க உள்ளன.

அலாஸ்கா பேச்சுவார்த்தைகள் போர்நிறுத்தத்தை உருவாக்கத் தவறியதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் ட்ரம்ப் பங்கேற்கும் உச்சிமாநாட்டை மூன்று ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சூழலை சர்வதேச அழுத்தம் உருவாக்கி வந்தாலும், பிராந்தியப் பிரச்சினைகளில் கீவ் மற்றும் மொஸ்கோ இன்னும் ஒற்றை நிலைப்பாட்டை எட்டாதது பலவீனமான முன்னேறத்தை காட்டுகிறது.

Share This