தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் போராட்டம்

இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறைப்பாடளித்துள்ளன.
அத்துடன் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சுமத்துப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்படி, தேசிய அளவில், நாளை இரவு 8 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.