கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை

சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகொன்று காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் சிக்கிய இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த கடல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டது.
இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இன்றி காணாமற் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
இதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 04 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடு, இவர்கள் இந்தியாவின் மினிகோய் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் நால்வரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.