அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?

அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?
  • சந்திரிகா, மகிந்த, கோட்டா ஆகியோரின் பரம்பமரை அரசியல் நீட்சி தொடரும் நிலையில் ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்ற கோசங்களுக்கு முடிவுரை எழுதப்படும் சாத்தியமே அதிகரிக்கிறது.

 

 

பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு இலங்கைத்தீவை வங்குரோத்து நிலைக்குத் தள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி வழிவகுத்தது என்ற உறுதியான கருத்து மேலோங்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிகளில் நாட்டு மக்கள் சரியான ஆட்சி முறையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கவில்லை.

2009ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழிருந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை வீழ்த்தியது. இதனைக் காரணமாகக் கொண்டு மகிந்த, அவரது அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் , அரசியல் சுய இலாபங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அவரது ஆட்சியைக் கேள்விக் கேட்கும் அளவிற்கு பலமான ஒரு எதிர்க்கட்சியும் இருக்கவில்லை. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததை காரணம் காட்டி பல மோசடிகளில் ஈடுபட்டும் வந்தனர்.

இருந்தாலும் இந்த நாடகம், அரசியலில் அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்ட போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது.

கோட்டாபய பதவி வகித்த போது இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் காணப்பட்டாலும், எதிர்ப்பாராத விதமாக நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்னிருந்தே இலங்கை மக்கள் அவர்களின் தேவைகளையும் , உரிமைகளையும் பெற போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாலும் கூட மக்களின் பொறுமையை சீண்டும் விதத்தில் கோட்டாபயவின் ஆட்சி செயலிழந்தது.

நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது, மின் துண்டிப்புகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு மணித்தியாலமாக அதிகரித்தது, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற அடிப்படை சிக்கல்கள் மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

கோட்டாபயவின் ஆட்சி இதற்கு முறையான தீர்வுகளை வழங்க முன்வரவில்லை. இதுவே மக்கள் பொறுமையை இழக்க வழிசமைத்தது.

பொறுமையை இழந்த மக்கள் வீதிக்கு இறங்க இரண்டு தடவை சிந்திக்கவில்லை.

கொரோனா தொற்று அதன் காரணமாக சுற்றுலாத்துறை வருமானத்தை இழந்தமையே பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், சரியான தலைமைத்துவமின்மையே நாட்டை பாரிய வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது.

2009 போருக்குப் பின்னரான சூழலிலும் கூட ஏற்றுமதிப் பொருளாதாரம் அதிகரிக்கவில்லை. தேசிய உற்பத்திகளும் அபிவிருத்தியடையவில்லை.

இதன் காரணமாக பொருளாதார வங்குரோத்து நிலையை சரி செய்ய பல சர்வதேச நாடுகளிலிருந்தும் கடன் வாங்க வேண்டிய நிலை உருவானது.

இந்த அனைத்து காரணங்களாலும் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராடினர்.

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அதிகாரக் கதிரைகளில் இருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டனர்.

முன்னாள் இராணுவ அதிகாரியாக பணியாற்றியிருந்த கோட்டாபயவிற்கு அரசியல் ஞானமும், அனுபவமும் குறைவாகவே காணப்பட்டது.

ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் கோட்டாபயவை வழிநடத்தியவர்களே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்பது அந்த சந்தரப்பத்தில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயம்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அதற்கு கோட்டாபய ராஜபகச் பலியானதாகவும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே பல அரசியல் மேடைகளில் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போதைய மறுமலர்ச்சி அரசாங்கமான அநுர அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பின்னர் கோட்டாபய கால்தடத்தை பின்பற்றும் ஒரு போக்கு காணக்கூடியதாக உள்ளது.

இவ்விடயம் தற்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

முதலில் கூறிய பரம்பரை அரசியல் மற்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை மக்கள் ஏற்று அதிகாரத்தில் அமர்த்தினாலும் கூட ஆட்சி அமைத்த நாளிலிருந்து அநுர உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் கோட்டாபயவை பின்பற்றுவதாகவே அமைந்துள்ளது.

இந்தக் கேள்வி அநுர ஜனாதிபதியாகும் முன்னரே எழுந்திருந்தது, அதற்கான காரணம் அவர்களின் கொள்கைகளுள் இறக்குமதி பொருளாதாரத்திற்கு தடை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே ஆகும்.

இந்த சந்தேகங்களுக்கு அவர்களின் கொள்கைகள் மூலமாகவே அவர்கள் மேடைகளில் பதிலளித்திருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடனேயே நாட்டில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியாமல் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அநுர அரசாங்கம் தள்ளப்பட்டது.

இதே நிலை தான் கோட்டாபய ஆட்சியில் மஞ்சள் இறக்குமதி மற்றும் உர இறக்குமதி நாடுக்குத் தடை விதிக்கப்பட்டதால் வருமானத்தை இழக்க நேரிட்டது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அநுர அரசாங்கத்தில் நீக்கப்பட்டுள்ள அதேவேளை, ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் எதுவித மாற்றங்களுமின்றி தொடருகின்றன.

இந்த விடயங்கள் அனைத்தும் அநுரவின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதால் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது அச்சம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இலங்கை தற்போது ஆட்சி மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. மறுமலர்ச்சி அரசியல் என மார்தட்டினாலும் கூட அது தொடர்பிலான எதுவித மாற்றமும் அவர்களின் நடவடிக்கைகளில் தெரியவில்லை.

நீண்ட நாட்களாக காலி முகத்திடல் போராட்டத்தை எதிர்கொண்ட மக்கள் புதிய ஆட்சியில் இருந்து பல விடயங்களை எதிர்ப்பார்க்கின்றனர் என்பதை அநுர உள்ளிட்ட அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆட்சியின் ஆரம்பத்திலேயே இவ்வாறு மக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவார்களாக இருந்தால் அதில் ஒரு சிக்கல் நிலை உள்ளது.

அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பது உட்பட போலிக் கல்வித் தகைமைகளை மக்கள் மத்தியில் முன்வைப்பது வரை சிக்கல்கள் காணப்படுகின்றன.

கோட்டாவின் அரசாங்கம் பதவி கவிழ்வதற்குக் காரண – காரியமாக அமைந்த அத்தனை விடயங்களும் தற்போது அநுரவின் அரசாங்கத்தில் தலைகாட்டுகின்றன.

1948 இல் இருந்து இனவாத நோக்கிலான அரசியல் – பொருளாதார திட்டங்களே இலங்கைத்திவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று பொருளியல் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஆகவே ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பரம்பரை கட்சிகளின் அரசியல் நீட்சியாக இருக்கக் கூடாது.

பரம்பரை அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கனவான்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இடதுசாரி – சோசலிசம் என்று கோசமிட்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை முற்றாக மாற்ற வேண்டும்.

அந்த மாற்றம் என்றும் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்புக்கு இடமளிக்க வேண்டும். வெறுமனே சமத்துவம் என்ற கோசத்துக்குள் சிங்கள தேசியத்துக்கள் ஏனைய தேசிய இனங்களை கரைக்கும் திட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது.

 

(கனூஷியா புஷ்பகுமார்)

Share This