ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே இன்று சந்திப்பு

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே இன்று சந்திப்பு

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்க உள்ளார்.

உயர் ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.

2016 ஆண்டுக்குப்பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும்
போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் ‘பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைத்தருவதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்திருந்தன.

இந்த விஜயத்தின் போது, ​​உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

பல அமைச்சரவை அமைச்சர்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்களுடம் அவர் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகர் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )