அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.

அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது.

இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார்.

பேசுபொருளாகுமா கச்சத்தீவு

பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது.

பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மோடி கூறப்போகும் செய்தி 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது.

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு

இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரமணியம் நிஷாந்தன்

Share This