நேரடி பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராயுமாறு ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தல்

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் பதற்றத்தை தணித்து நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை
ஆராயுமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம்மி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்தது.
இந்நிலையில் பாகிஸ்தானும் தொடர் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.