
இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கரன்தெனிய ராஜு’விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவருக்கு எதிராக 15 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த இரு ஆண்டுகளில் 81 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2024 முதல் தற்போது வரை, சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மேலும் 8 பேரை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் இதுவரை 1,800க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
