சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது.
வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பெய்ஜிங்கின் துணை மேயர் சியா லின்மாவோ தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 600 மில்லி மீற்றர் ஆகும். எனினும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய கனமழை பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் திங்களன்று உச்சத்தை எட்டியிருந்தது.
இதன்படி, மியுனில் 573.5 மில்லி மீற்றர் வரை மழை பெய்ததாகவும், உள்ளூர் ஊடகங்கள் இதை “மிகவும் அழிவுகரமானது” என்று விவரித்துள்ளன.
ஹெபெய் மாகாணத்தில், கடுமையான மழை காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கிற்கு வெளியே உள்ள செங்டே நகரில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெய்ஜிங்கில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மியுன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் கனமழை காரணமாக சாதனை அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீர்த்தேக்கத்திற்கு வடக்கே உள்ள ஹெபே கிராமத்தில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள அதிக மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெள்ளம், சீன கொள்கை வகுப்பாளர்களுக்கும், வானிலை ஆய்வாளர்களுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.