முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக, நீர் கூட அருந்தாமல் 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், அன்னையின் உயரிய தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து, 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அன்னை பூபதி தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

ஒரு மாத காலமாகத் தொடர்ந்த அந்த அறப்போர், 1988 ஏப்ரல் 19 ஆம் திகதியான இன்றைய தினமே அவர் உயிர் துறந்ததோடு நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )