ஜம்மு-காஷ்மீரில் மண்சரிவு காரணமாக 30 பேர் பலி

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழையால் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர் மழைக்கு மத்தியில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தை மிகவும் துயரமானது என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த நிலச்சரிவு காரணமாக குடியிருப்புகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச, தனியார் அலுவலகங்களையும் மூட ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 40 மணி நேரத்திற்கு ஜம்முவில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், ஆற்றங்கரை மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.