
இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்; அன்பும் அறமும் மலரட்டும்! தீபாவளியின் ஆன்மிகத் தத்துவமும் சமூகப் பண்பாட்டு மகத்துவமும்
– வடமராட்சி அல்வாய் சமயச் சொற்பொழிவாளர் நேசன்
தீபாவளி என்பது வெறுமனே புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல. அறியாமை எனும் இருளை அகற்றி, அறிவு எனும் ஒளியை மனங்களில் ஏற்றுவதுடன், அன்பு, ஒற்றுமை, பகிர்வு, அறம், மனிதநேயம் ஆகிய உயரிய வாழ்வியல் பண்புகளையும் வலியுறுத்தும் ஆன்மிகத் திருநாளாகும். இந்து மக்களின் பாரம்பரியத்திலும் பண்பாட்டிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இப்பண்டிகையின் உண்மையான தத்துவம், அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதன் சிறப்பு, உணவுப் பழக்கவழக்கங்கள், கோலமிடுதலின் பின்னணி, கடன் வாங்கி ஆடம்பரமாகக் கொண்டாடுவதன் விளைவுகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வடமராட்சி அல்வாய் சமயச் சொற்பொழிவாளர் நேசன் அவர்கள் இந்நேர்காணலில் விளக்குகிறார்.
கேள்வி 1: தீபாவளி என்றால் என்ன? இதன் அடிப்படைச் செய்தி என்ன?
பதில்: தீபாவளி என்பது சிறப்புமிக்க ஆன்மிகப் பண்டிகையாகும். வடமொழிச் சொல்லான தீபாவளி என்பதில் ‘தீபம்’ என்பது ஒளியையும், ‘ஆவளி’ என்பது வரிசையையும் குறிக்கின்றது. எனவே, வரிசையாகத் தீபங்களை ஏற்றி வழிபடுவதே தீபாவளி எனப் பொருள்படுகின்றது.
தீபாவளியின் அடிப்படைத் தத்துவம் இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணமாகும். மனித மனத்தில் காணப்படும் பேராசை, பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீய எண்ணங்கள் இருளுக்கு ஒப்பானவை. இத்தகைய எண்ணங்களை அகற்றி, நல்ல சிந்தனைகளையும் அன்பையும் மனதில் வளர்த்துக்கொள்வதே தீபாவளியின் உண்மையான நோக்கமாகும்.
ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றும்போது, முதலில் ஒளி கொடுத்த தீபத்தின் ஒளி குறைவதில்லை. அதுபோலவே, நாம் பிறருக்காக வாழ்ந்து, எமது அறிவையும் அன்பையும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது அவை குறைவதில்லை மாறாக, சமூகத்தில் நன்மை பெருகுகின்றது.
அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் என்பதையே தீபாவளி எமக்கு உணர்த்துகின்றது.
கேள்வி 2: தீபாவளி என்பது ஒரு சமய நிகழ்வா அல்லது சமூக நிகழ்வா? இதனை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும்?
பதில்: தீபாவளி என்பது சமயத்துடனும் சமூகத்துடனும் பின்னிப்பிணைந்த ஒரு பண்டிகையாகும். இந்து மக்களின் பாரம்பரியத்திலும் மரபிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பண்டிகை, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாகவும் அமைகின்றது.
இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு காரணமாக உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்குக்கூட பலருக்கு வாய்ப்புக் குறைந்து வருகின்றது. குடும்பத்திலுள்ள பெற்றோருக்குக்கூட தமது பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு நேரமில்லாத சூழல் காணப்படுகின்றது.
இத்தகைய நிலையில், தீபாவளி போன்ற பண்டிகைகள் உறவுகளை மீண்டும் ஒன்றிணைக்கும் வாய்ப்பாக அமைகின்றன. உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, புத்தாடை அணிந்து, சிற்றுண்டிகளைப் பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றோம்.
எனவே, தீபாவளி என்பது சமய வழிபாட்டுடன் மட்டும் நின்றுவிடாமல், குடும்ப உறவுகளையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு பண்பாட்டுப் பண்டிகையாகவும் விளங்குகின்றது.
கேள்வி 3: பொதுவாக அமாவாசை நாளில் சுபகாரியங்கள் செய்யத் தயங்குவார்கள். ஆனால் தீபாவளி அமாவாசை அன்று வருவதை எவ்வாறு பார்க்க வேண்டும்?
பதில்: இந்து மரபில் அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் நாளாகக் கருதப்படுகின்றது. ஆடி அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்கின்றோம். இதனால் அமாவாசை நாளில் சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை சமூகத்தில் காணப்படுகின்றது.
ஆனால் தீபாவளி அமாவாசை நாளில் கொண்டாடப்படுவது தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது.
அமாவாசை என்பது முழுமையான இருளைக் குறிக்கும். அத்தகைய நாளில் நாம் ஒரு தீபத்தை ஏற்றி வைக்கும்போது, அந்தத் தீபம் இருளைப் போக்கி ஒளியைப் பரப்புகின்றது. அதுபோலவே, மனித வாழ்க்கையிலும் பல்வேறு துன்பங்களும் சவால்களும் காணப்பட்டாலும், நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும்.
எனவே, அமாவாசை நாளில் தீபாவளியைக் கொண்டாடுவது இருளை அகற்றி ஒளியைப் பிறக்கச் செய்யும் உயரிய தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
கேள்வி 4: தீபாவளியைச் சரியான முறையில் எவ்வாறு கொண்டாட வேண்டும்?
பதில்: தீபாவளி நாளன்று அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இறைவனை வழிபடுவது எமது பாரம்பரிய வழக்கமாகும். குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து இந்நாளைக் கொண்டாட வேண்டும்.
தீபாவளியுடன் தொடர்புடைய நரகாசூரன் வதம் பற்றிய புராணக் கதையும் இதன் ஆன்மிகத் தத்துவத்தை எடுத்துரைக்கின்றது.
புராண மரபின்படி, பூமாதேவிக்கும் திருமாலின் அவதாரமான கிருஷ்ணபரமாத்மாவுக்கும் பிறந்தவரே நரகாசூரன். ஆரம்பத்தில் சிறப்பாக விளங்கிய அவன், பின்னாளில் ஆணவமும் அகங்காரமும் கொண்டு தேவர்களுக்குப் பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தினான்.
தனது தாயின் கரங்களால் மட்டுமே தனக்கு மரணம் நேரிட வேண்டும் என்ற வரத்தைப் பிரம்மாவிடம் பெற்றிருந்தான். தனது தாய் தன்னைக் கொல்லமாட்டாள் என்ற ஆணவத்தில் தொடர்ந்து கொடுமைகளைச் செய்துவந்தான்.
இதனால் துன்பமடைந்த தேவர்கள் கிருஷ்ணபரமாத்மாவிடம் முறையிட்டனர். நரகாசூரனை அழிப்பதற்காகக் கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் போருக்குச் சென்றார். போரின்போது கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைக் கண்ட சத்தியபாமா, நரகாசூரனை நோக்கி அம்பு எய்தினாள். அவளது அம்பினால் நரகாசூரன் வீழ்ந்தான் எனப் புராணம் கூறுகின்றது.
நரகாசூரனின் அழிவைத் தொடர்ந்து மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நாளே தீபாவளியாகக் கருதப்படுகின்றது.
இந்தப் புராணத்தின் ஊடாக ஆணவம், அகங்காரம், தீய எண்ணங்கள் ஆகியவற்றை அகற்றி நன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் வெளிப்படுத்தப்படுகின்றது.
எனவே, வெளிப்புறக் கொண்டாட்டங்களுடன் நின்றுவிடாமல், மனத்தில் உள்ள தீய எண்ணங்களையும் அகற்றி நல்ல சிந்தனைகளுடன் வாழ்வதே உண்மையான தீபாவளிக் கொண்டாட்டமாகும்.
கேள்வி 5: சில குடும்பங்களில் தீபாவளி அன்று அசைவ உணவும் சில குடும்பங்களில் சைவ உணவும் சமைக்கப்படுகின்றன. ஆன்மிக ரீதியாக இதில் எது சரியானது?
பதில்: உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பாரம்பரியத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. சில குடும்பங்களில் அசைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. இருப்பினும், தீபாவளி போன்ற ஆன்மிகச் சிறப்புமிக்க நாளில் சைவ உணவுகளை உட்கொண்டு மகிழ்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
சைவ உணவுகள் சாத்வீகமான குணத்தை வளர்க்க உதவுகின்றன. அன்றைய நாளில் நல்ல எண்ணங்களுடனும் நல்ல சிந்தனைகளுடனும் வாழ்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அதேபோன்று, மதுபானம் அருந்திவிட்டு வீதிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும். தீபாவளி என்பது பிறருக்கு இடையூறு விளைவிக்கும் நாளல்ல. நாம் நல்ல பிரஜைகளாகவும் நல்ல பண்புகளைக் கொண்ட மனிதர்களாகவும் வாழ்வதை வெளிப்படுத்தும் நாளாக அமைய வேண்டும்.
கேள்வி 6: தீபாவளி நாளன்று வீட்டின் வாசலில் அரிசி மாவில் அழகாகக் கோலமிடுகிறார்களே. இது வெறும் அழகுக்காக மட்டுமே செய்யப்படுவதா?
பதில்: கோலமிடுதல் என்பது வெறுமனே அழகுக்காக மேற்கொள்ளப்படும் செயல் மட்டுமல்ல. எமது முன்னோர்கள் அரிசி மாவு மற்றும் தானியங்களைக் கொண்டு கோலமிடும் வழக்கத்தைப் பின்பற்றி வந்துள்ளனர்.
இதன் மூலம் எறும்புகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கின்றது. நாம் அறியாமலேயே பிற உயிர்களுக்கு உணவளிக்கும் ஒரு அறச்செயலாக இது அமைகின்றது. எமது வாழ்வியலில் பிற உயிர்களிடத்திலும் அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்ற பண்பாடு இவ்வழக்கத்தின் ஊடாக வெளிப்படுகின்றது.
மேலும், ஒருவர் எவ்வளவு கவலையுடன் இருந்தாலும் அழகாக வரையப்பட்ட கோலத்தைப் பார்க்கும்போது மனதில் ஒருவித மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது. கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் வளர்கின்றன.
எனவே, கோலமிடுதல் என்பது அழகியல் உணர்வையும் படைப்பாற்றலையும் பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் பண்பையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாரம்பரியமாகும்.
கேள்வி 7: இன்றைய சூழலில் பலர் கடன் வாங்கியாவது ஆடம்பரமாகத் தீபாவளியைக் கொண்டாட நினைக்கிறார்களே. இது சரியான முறையா?
பதில்: கடன் வாங்கி ஆடம்பரமாகத் தீபாவளியைக் கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. குறிப்பாக, புத்தாடைகள் வாங்கித் தருமாறு சில பிள்ளைகள் பெற்றோரை வற்புறுத்துவதால், பெற்றோர் தமது பொருளாதார வசதிக்கு மீறிக் கடன் பெறும் நிலை காணப்படுகின்றது.
ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் அணியும் ஆடைகளின் விலையிலோ, செலவிடும் பணத்திலோ தங்கியிருக்கவில்லை. குடும்பத்தினர் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில்தான் அதன் உண்மையான சிறப்பு இருக்கின்றது.
வாழ்க்கையில் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் கடன் சுமையின்றி வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும். கடன் வாங்கினால் அது குடும்பத்திற்குப் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும். கடன் கொடுத்தவர்கள் வீட்டைத் தேடி வரும்போது மனஅழுத்தமும் சங்கடமும் உருவாகும். சில வேளைகளில் கடன் குடும்ப உறவுகளுக்கிடையேயான அன்பைக்கூடப் பாதிக்கக்கூடும்.
இதனால்தான் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.
கடன் வாங்கி ஆடம்பரமாகக் கொண்டாடுவதைவிட, கடன் சுமையின்றி அன்புடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுவதே சிறந்ததாகும்.
கேள்வி 8: இன்றைய சூழலில் பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக இருக்கிறது. தீபாவளிக்கு நிச்சயம் பட்டாசு வெடிக்கத்தான் வேண்டுமா?
பதில்: தீபாவளியைக் கொண்டாடுவதற்குப் பட்டாசு வெடிப்பது கட்டாயமான ஒன்றல்ல. பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிலிருந்து எழும் ஒலியினால் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
சமூகத்தில் இருதய நோயாளர்கள், முதியவர்கள், சிறுவர்கள் எனப் பலர் வாழ்கின்றனர். மாணவர்கள் இரவு நேரங்களில் கல்வி கற்கின்றார்கள். இத்தகையவர்களின் நலனைக் கருத்திற்கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.
மேலும், பட்டாசுகளைக் கையாளும்போது சிறுவர்களுக்குத் தீக்காயங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக மற்றொரு குடும்பத்தின் அமைதியைப் பறிப்பது சரியானதல்ல. பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று அயலவர்கள் கூறும்போது அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெடிப்பதால் அவர்களுடன் முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகின்றது.
ஆகவே, “தீபாவளியின் நோக்கம் இதுதானா” என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறருக்கு நன்மை விளைவிக்கக்கூடிய செயல்களையே நாம் முன்னெடுக்க வேண்டும். எனவே, சுற்றுச்சூழலையும் சமூகத்தினரின் நலனையும் கருத்திற்கொண்டு பட்டாசுகளைத் தவிர்ப்பது அல்லது அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது சிறந்ததாகும்.
இறுதியாக, தீபாவளி என்பது வெறுமனே ஒரு கேளிக்கையான பண்டிகையாக அமைந்துவிடக் கூடாது. அது மனித வாழ்வியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிறப்புமிக்க திருநாளாக அமைய வேண்டும். எமது மனங்களில் நல்ல எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக்கொண்டு, கடன் சுமையின்றி, பிறருக்கு இடையூறு விளைவிக்காமல், அன்புடனும் ஒற்றுமையுடனும் இந்நாளைக் கொண்டாட வேண்டும்.
இருள் அகன்று ஒளி பிறக்கும் இத்திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவட்டும். உலகெங்கும் வாழும் இந்து மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
