அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு

உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு ஹொரவப்பதான தேர்தல் தொகுதியில் மக்கள் சந்திப்பொன்று நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும் வழங்கப்படவில்லை. நெல்லுக்கு உத்தரவாத விலையும் கிடைத்தபாடில்லை. விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் விவசாயிகளின் வாக்குகளால் அரச அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் இன்று விவசாயியை மறந்துவிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் நடந்த அனர்த்தங்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டன. இதன் காரணமாக, ஒரு ஏக்கரில் கிடைக்கும் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. நியாயமான உத்தரவாத விலை இன்னும் கிடைத்தபாடில்லை. ரூ.120 உத்தரவாத விலையானது போதுமானதாக இல்லை.

நெல் கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொய் சொன்ன தற்போதைய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. விவசாயியை ஏமாற்றி இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share This