தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது.

பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இம்முறை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாது கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி, மு.க. ஸ்டாலின் (தி.மு.க, திருவாரூரில் ஆரம்பித்து தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க), மயிலாப்பூரில் ஆரம்பித்து அவரது, சொந்த ஊரான சேலத்தில் பிரசாரத்தை முடித்தார்.

விஜய் (த.வெ.க), பெரம்பூரில் ஆரம்பித்து சென்னை நந்தனத்தில் பிரம்மாண்டமான கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சீமான் (நா.த.க), காரைக்குடியில் தனது இறுதிக்கட்டப் பேச்சை நிகழ்த்தினார்.

அன்புமணி ராமதாஸ் தர்மபுரி, டி.டி.வி.தினகரன் காரைக்குடி,, பிரேமலதா விருத்தாசலம்,திருமாவளவன் திருக்கோவிலூர் என பலரும் தத்தமது இலக்குகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் களத்தின் வேட்பாளர்கள்: மொத்தம் 4,023 பேர் . இதில் ஆண்கள்: 3,579; பெண்கள்: 443; மூன்றாம் பாலினத்தவர்: 1.

வாக்காளர்கள் மொத்தமாக 5 கோடியே 73 இலட்சத்து 43,291 பேர். இதில் பெண்களின் எண்ணிக்கை 2.93 கோடி ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ள 75,054 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 120,000 தமிழக பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 3,60,000 அரசாங்க ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, காலை 6.00 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தின் 10ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேகக் கட்டுப்பாட்டு அறை மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவை நேரடியாகக் கண்காணிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )