வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 04 விசாரணை குழுக்கள் நியமனம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நான்கு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த கொலைக்காக நான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மிதிகம லசா என்ற லசந்த விக்ரமசேகர மீது அவரது அலுவலகத்தில் இருந்த போது இன்று (22) காலை 10.30 அளவில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானார்.
இதன்போது காயமடைந்த அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இன்று தலைவரை பொது மக்கள் சந்திக்கும் நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார்.
இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மிதிகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர 03 பிள்ளைகளின் தந்தையாவார்.