மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த

எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம இல்லத்திலிருந்து எப்போது வெளியேறுவார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“இது மகிந்த ராஜபக்சவை அகற்றுவதற்கான திருத்தம் அல்ல. பொதுமக்களின் வரிப் பணத்தில் செலுத்தப்படும் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற சலுகைகளையும் ஒழிப்பதற்கான முடிவு.”
“இன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். நாளை இந்த சட்டமூலம் விவாதிக்கப்படும்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டமாக நிறைவேற்றப்படும்.
“நாட்டின் நிறைவேற்றுத் தலைவர்களாக நீண்ட காலமாகபணியாற்றியவர்கள் சட்டத்தின்படி செயல்படுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.