நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் மோதிய போட்டிகளில் நடந்த சம்பவங்களைசர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழாம் விசாரித்தது.
இதன்படி, செப்டம்பர் 14 ஆம் திகதி நடந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் இருவருக்கும் ஐசிசி நடத்தை விதிகளின் உறுப்புரை 2.21ஐ மீறியமைக்காக தங்கள் போட்டி ஊதியத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தலா இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதே குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.
செப்டம்பர் 21ஆம் திகதி நடத்த போட்டியின் போது, அருவருப்பான சைகை பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்டதால், அவருக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
செப்டம்பர் 28 ஆம் திகதி அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2.21வது உறுப்புரையை மீறிய குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியுடன் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்தப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் மீண்டும் 2.21 ஆவது உறுப்புரையை மீறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 30 வீதம் அபராதம் மற்றும் கூடுதலாக இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹாரிஸ் ரவுஃப் 24 மாத காலப்பகுதியில் மொத்தம் நான்கு தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுங்கு விதிகளின்படி, நவம்பர் 4 மற்றும் நவம்பர் 6 ஆகிய திகதிகளில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
