வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் ஐவர் கைது

வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும்  ஐவர் கைது

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஐவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு அந்த பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனக் கூறி, ஒரு குழு மோதலில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டது.

இந்தச் சம்பவத்தில், மரணம் தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிஸார் மீது கூடியிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 05 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் ஒரு கெப் ரக வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்றுகூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை மற்றும் இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This