இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இரண்டு இலங்கையர்கள் கைது

ஜோர்டானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யார்டேனாவின் ஜோர்டான் பள்ளத்தாக்கு சமூகத்தில் வசிக்கும் ஒருவர் அவர்களை தனது தோட்டத்தில் கண்டு பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் குடிநீர் கேட்ட பின்னர் குடியிருப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
யார்டேனாவைச் சேர்ந்த நிர், குறித்த இரண்டு இலங்கையர்களைக் கண்டுள்ளார். “அவர்கள் அச்சுறுத்தலாகத் தெரியவில்லை, ஆனால் சாதாரண தொழிலாளர்களைப் போல தெரிந்தனர்” என்று அவர் கூறினார்.
அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டதுடன், அவர்களின் தொலைபேசியை மின்னேற்றம் (charge) செய்யச் சொன்னார்கள்.
“நான் அவர்களுக்கு காபி மற்றும் குக்கீகளைக் கொண்டு வந்தேன், என் மனைவி அவர்கள் மீது சந்தேகப்படத் தொடங்கினார்” என்று நிர் கூறினார். அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றார்.
அவர்கள் தடுமாறினர். “அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குப் புரிந்தது, ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
நான் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தகவல் வழங்கினேன். அவர்கள் மிக விரைவாக வந்து குறித்த இருவரையும் பொறுப்பேற்றனர்,” என்று நிர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் லம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளுக்காக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.