ட்ரம்பின் வரி விதிப்பால் ஏற்பட்ட பின்னடைவு; அமெரிக்க சந்தைகளில் பெரும் சரிவு

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது.
கோவிட் தொற்று பரவிய காலப்பகுதிக்கு பின்னர் அமெரிக்க பங்குச் சந்தை இவ்வளவு பெரிய பின்னடைவைச் சந்திப்பது இதுவே முதல் முறை. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது.
ட்ரம்ப் அறிவித்துள்ள வரிகள் வர்த்தகப் போருக்கும், உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கும் வழிவகுக்கும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பெரும் இழப்பை சந்தித்தன. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 9.2 சதவீதம் சரிந்தது. இது ஐந்து ஆண்டுகளில் ஆப்பிளின் மிகப்பெரிய தினசரி சரிவாகும்.
மற்றொரு பிரபல ஐடி நிறுவனமான என்விடியா 7.8 சதவீதம் சரிந்தது. அமேசான் பங்குகள் ஒன்பது சதவீதத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார், இது உலக நாடுகள் மத்தியில் புதிய வர்த்தகப் போரை தொடங்குகிறது என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா பொருட்களுக்கு 10 சதவீத அடிப்படை வரியை விதிக்கிறது. மற்ற நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் அதிகபட்ச வரி 49 சதவீதம் ஆகும்.
சீனா மீது 34 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 20 சதவீதமும், ஜப்பானின் மீது 24 சதவீதமும், தென் கொரியாவின் மீது 25 சதவீதமும் வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.