திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் ஆரம்பம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் சுவாமி சன்னதி முன்பு பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப இன்று காலை 6.30 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதன்போது வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழா இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி இரவு வெள்ளித் தேரோட்டமும், அடுத்த நாள் 30 ஆம் திகதி மகா தேரோட்டமும் நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன விழா டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறும். அன்று அதிகாலை 04 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 06 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட 02 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீப தரிசன நாளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீற்றர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்குவர். கார்த்திகை தீப தரிசன பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
