இலங்கையில் முதலீடு செய்ய சரியான தருணம் -தென்னிந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு

தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உருவாகி வரும் இணையற்ற வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயவும் ஆலோசனை நடத்தவும் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவர் டாக்டர் கணேசனாதன் கேதீஸ்வரன், அழைப்பு விடுத்துள்ளார்.
தங்கள் உலகளாவிய தடம் மற்றும் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்த விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை சிறந்த இடமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இலங்கை வெறும் ஒரு தீவு மட்டுமல்ல, அது பாலத்தை போல திசைகளை இணைக்கும் நாடு. கிழக்கு மேற்காக பயணிக்கும் கப்பல்கள் செல்லும் பாதையில் அமையப்பெற்றுள்ள தேசம். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பரந்த நுகர்வோர் சந்தைகளை ஆராய முடியும்.
இலங்கையில் தொழில் துவங்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அல்லது புதுச்சேரியை சேர்ந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோர்களுக்கு கணிசமாகக் குறைக்கப்பட்ட தளவாடச் செலவுகள், வர்த்தகத்திற்கு முன்னுரிமை தரும் அரசாங்கத்தின் அணுகுமுறை, மற்றும் மிகவும் கல்வியறிவு பெற்ற, திறமையான பணியாளர்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகளாலும் இந்த நாடு அவர்களுக்கு பிரதான தேர்வாக அமையும்.
பங்கு சந்தையில் காணப்படும் மீள்தன்மை மற்றும் உயர்ந்து வரும் பங்கு குறியீடுகள் நமக்கு தெளிவான சமிக்கைகளை அளிக்கின்றன.
அவை எமது புதிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் வலிமையான பொருளாதாரக் கொள்கையை பிரதிபலிக்கின்றன.
கடினமான காலகட்டத்தை நாம் கடந்து விட்டோம். நிலையான வளர்ச்சி எனும் தாரகமந்திரம் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றால் வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறோம்.இலங்கையின் சந்தைக்குள் நுழைவதற்கு இதுவே சரியான தருணம்.
முதலீட்டாளர்களுக்கு முக்கிய சலுகைகள், வரிப் பயன்கள், உலகத்ததரத்துடன் கூடிய தொழில்துறை மண்டலங்கள், தொழில் தொடங்குவதற்கு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை திட்டங்கள் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் வழங்குகிறது. பின்வரும் துறைகள் முதலீட்டிற்கு மிகவும் உகந்தவை ஆகும்.
- மேம்பட்ட உற்பத்தி மற்றும் மின்னணுவியல்
- விவசாயம்
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை (BPM)
- மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள்
- வேளாண் பதப்படுத்துதல் மற்றும் உணவு சார்ந்த தொழில் (Food Packaging)
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்கட்டமைப்பு
தென்னிந்தியாவுடன் ஆழ்ந்த சரித்திர, மொழி மற்றும் கலாச்சார பந்தங்களை இலங்கை கொண்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு கள ஆய்வு முதல் தொழிற்சாலை திறப்பு விழா துவங்கும் வரை எனது தூதரக அலுவலகம் செயன்முறை திட்டங்கள் மற்றும் அரசாங்க விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு இலங்கை துணைத் தூதரகம் சார்பாக பிரத்தியேக சந்திப்புகள், துறை சார்ந்த கலந்தாலோசனைகள், தொழில்துறை மண்டலங்களின் மெய்நிகர் சுற்றுப்பயணம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.