இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாக வழிவகுத்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கண்டி விலங்குகள் நலன் சமூக பாதுகாப்பு சங்கத்தின் (KACPAW) செயலாளர் சம்பா பெர்னாண்டோ, நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் கூறினார்.
“நாங்கள் வெடிக்கவிருக்கும் ஒரு எரிமலையில் அமர்ந்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார். “இந்த ஆண்டு, தேசிய பாதீட்டில் நாய் நலனுக்காக 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது, அதை நாங்கள் பாராட்டுகிறோம்.
ஆனால் கடந்த ஆண்டு, நாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 184 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது, இதில் உண்மையில் 27 மில்லியன் ரூபா மட்டுமே பயன்படுத்தப்பட்டது.”
பெண் நாய்கள் வருடத்திற்கு இரண்டு முறை பிரசவிப்பதாகவும், இப்போது இலங்கையில் ஒவ்வொரு எட்டு பேருக்கும் ஒரு நாய் இருப்பதாகவும் பெர்னாண்டோ கூறினார்.
எனவே, நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒரே வழி நாய்களைக் கொல்வது அல்லது கருத்தடை செய்வதுதான் என்று அவர் விளக்கினார்.
ஆனால் கொலை செய்வது 2006ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், கருத்தடை திட்டங்கள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை,” என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“இது தொடர்ந்தால், தெருநாய்களின் எண்ணிக்கை விரைவில் மனித மக்கள்தொகைக்கு இணையாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய நாய் பதிவு முறையைத் தொடங்குமாறு பெர்னாண்டோ அரசாங்கத்திடம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் கருத்தடை திட்டங்களை ஆதரிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். ரேபிஸுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போட 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
