ட்ரம்பின் வரி அதிகரிப்பால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆடை தொழிற்சாலைகள் முடங்கும் சாத்தியம்

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
தற்போது 12 வீதமாக காணப்படும் வரியானது 40 வீதத்திற்கும் அதிகமாக அதிரிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரி மிக அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை இலங்கையின் ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் இலங்கையின் ஏற்றுமதியில் 25 வீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக,ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இந்தக் கட்டணக் கொள்கை இலங்கையின் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய வழிகள் உள்ளன.
மேலும், ஏற்றுமதி வருவாய் கணிசமாகக் குறையக்கூடும் என பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
“ஏற்றுமதிகள் இவ்வாறு வீழ்ச்சியடைந்தால், எதிர்காலத்தில் இலங்கையில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரின் வேலைகள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத வரியை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் புதிய வரி விதிப்பால் நூறு நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரியாக கம்போடியாவிற்கு 49 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிக வரி விகிதங்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.