தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்தது.
இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டொக்டர் ஜெயசீலன் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவின் மருந்து சந்தை மிகப்பெரியது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60 சதவீத பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளது.
உள்நாட்டு பயன்பாட்டுக்கு மாத்திரமின்றி அமெரிக்கா, பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, ‘ஜெனரிக்’ எனப்படும் மூலப்பெயரிலான மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வருடந்தோறும் 2.40 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து மாத்திரம் வருடாந்தம் 8,000 கோடி ரூபாவிலிருந்து 10,000 கோடி ரூபா வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிா் காக்கும் சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.
அதன் வா்த்தக மதிப்பு 100 கோடி ரூபா வரை உள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்திற் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம்.
இதன் காரணமாக 100 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படலாம். அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும்.
அதேவேளையில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியா – பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை முன்பதிவு செய்துள்ளன.
தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, போா்ச் சூழல் அதிகரித்தாலும் உள்நாட்டு மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது” என்றார்.