சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி தனது இறுதி லீக் போட்டியில் நேற்று விளையாடியிருந்தது.
18 கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை இம்முறை பிடித்திருந்தது. 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றிருந்தது.
தனது இறுதி லீக் போட்டியில் சென்னை அணி மிகவும் அபாராமாக விளையாடி வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, “அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனே பதிலளித்த சக வர்ணனையாளர் சோப்ரா, அவரின் பெயர் S இல் தொடங்குமா என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரெய்னா, அவர் சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சிரித்தபடியே பதில் கூறினார்.
இதேவேளை, சென்னை அணிக்கான அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருக்கின்றார்.
2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் ரெய்னா அரைச்சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.