
டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
“டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக காணாமல் போன ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்தார்.
இதன்படி, இந்த பேரிடர் சூழ்நிலை காரணமாக தற்போது காணாமல் போன 203 பேருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெறும் நோக்கில் இந்த சான்றிதழ்களை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்காக தேவையான சட்ட விதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த பேரிடர் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம அலுவலர் உறுதிப்படுத்தினால், மாவட்ட துணைப் பதிவாளருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தின் தொடர்புடைய ஒப்புதலால் பிரதேச செயலாளரின் ஒப்புதலுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காரணமாக இறந்ததாக அடையாளம் காணப்பட்ட 611 பேரில் 126 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் மேலும் தெரிவித்தார்.
