இலங்கையின் பொருளாதார இலக்குகள் ஆபத்தில் – உலக வங்கி எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதார இலக்குகள் ஆபத்தில் – உலக வங்கி எச்சரிக்கை

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அதிகரிக்க அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்களை
செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதன் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.5 சதவீதமாக மிகக் குறைவாக இருக்கும் நாட்டின் தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு வரவுகள் வளர்ச்சி இலக்குகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இலங்கை தொடர்ச்சியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூத்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வாக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த அந்நிய நேரடி முதலீடு முன்னர் சுமார் 1% ஆக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர் சுமார் 1.5% ஆக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 3% ஆக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு நிலத்தின் அணுகல் பாரிய தடையாக இருப்பதாக வாக்கர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 80% நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதிகாரத்துவம் மற்றும் பல அமைச்சகங்களின் கட்டுப்பாடு சாத்தியமான முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலைமை விவசாயத் துறையில் முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக இடையூறாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தொழிலாளர் சட்டங்கள் காரணமாக வணிக நெகிழ்வுத்தன்மை குறைவாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த சட்டங்கள் பல துறைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

இந்த கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டிற்காக இலங்கை போட்டியிடுவது கடினமாக இருக்கும் என வாக்கர் எச்சரித்தார்.

நில நிர்வாகத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் விதிமுறைகளை நவீனமயமாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குதல் ஆகியவை இலங்கையின் பொருளாதார இலக்குகளை அடைவதற்கான முக்கியமான படிகள் என்று உலக வங்கி மேலும் வலியுறுத்தியுள்ளது.

Share This