ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் நல்லிணக்கத்துக்கு சிக்கல் என அரசாங்கம் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதி தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் இவ்வாறான முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும் கூறியுள்ளார்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.